12ஆவது ஐபிஎல் தொடரில் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் பார்திவ் படேல், ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் அஹமதாபாத் சென்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல், தனது தந்தை மூளையில் ஏற்பட்ட ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து அவரை கவனிப்பதில் மட்டுமே நேரம் செலவிட்டு வருகிறார்.
இது குறித்து பார்திவ் படேல் பேசுகையில், பிப்ரவரி மாதத்திலிருந்து எனது தந்தை மூளையில் ஏற்பட்ட ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் மட்டுமே நேரம் செலவிட்டு வருகிறேன். எனது தந்தையின் ஆசைக்காகத்தான் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கிரிக்கெட் விளையாடுகையில் ஆட்டத்தில் மட்டுமே எனது கவனம் முழுவதும் இருக்கும். ஆட்டம் முடிந்த பின்னர், அப்பாவை பற்றி மட்டும்தான் சிந்திக்கிறேன். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்னரும் எனது போனை பார்க்கையில் எந்தவித கெட்ட செய்திகளும் வராமலிருக்க வேண்டும் என வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானதையடுத்து பார்திவ் படேலுக்கு ரசிகர்கள் இணையத்தில் ஆறுதல் கூறிவருகின்றனர். மேலும், தனது தந்தை உடல்நிலை சரியில்லாத நிலையிலும், கிரிக்கெட் விளையாட முடிவு செய்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடியுள்ள பார்திவ் படேல் 172 ரன்களை எடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தின்போது, இந்த செய்தியினை ட்விட்டரில் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு பதிவிட்டிருந்தர். மேலும், தனது தந்தை உடல்நலனைக் கருத்தில் கொண்டு சையத் முஷ்டாக் அலி தொடரிலும் பங்கேற்கவில்லை.