ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூரு அணியில் கேப்டன் கோலி, பார்திவ் படேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 35 ரன்களை சேர்த்த நிலையில், கோலி 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்த பார்திவ் படேல், பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
24 பந்துகளில் 7 பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்து செட் பேட்ஸ்மேனாக இருந்த அவர், முருகன் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மொயின் அலி 4 ரன்களுடனும், அகஷ்தீப் நாத் 3 ரன்களுடனும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால், பெங்களூரு அணி 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் - மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், 17 ஓவர் வரை சற்று நிதானமாகவே ஆடியது. அதனால், பெங்களூரு அணியின் ஸ்கோர் 17 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர், கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் - மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இணை 54 ரன்களை சேர்த்தனர். குறிப்பாக முகமது ஷமி வீசிய 19ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் தொடர்ந்து மூன்று சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது.
அந்த அணி தரப்பில் டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 84 ரன்களுடனும், ஸ்டோய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.