12-வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வார்னர் 85 ரன்களும், விஜய் சங்கர் 40 ரன்களும் எடுத்தனர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் - நிதீஷ் ராணா இணை களமிறங்கியது. அதிரடி வீரர் கிறிஸ் லின் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் களம் புகுந்த அனுபவ வீரர் உத்தப்பா, ராணா ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக ஆடிய இந்த இணை, இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். உத்தப்பா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, சித்தாத் கவுலின் அற்புதமான பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும், அதிரடியாக ஆடிய இளம் வீரர் ராணா ஐபிஎல் போட்டிகளில் தனது 6-வது அரை சதத்தை 35 பந்துகளில் கடந்தார். இதனையடுத்து நட்சத்திர வீரர் ரஸல் களமிறங்கினார்.
பந்தை சிக்ஸருக்கு விரட்டும் ரஸல் கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 68 அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய பின்னர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராணா 68 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் 16-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்ததையடுத்து, கொல்கத்தா அணி 24 பந்துகளில் 59 ரன்கள் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
17-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், அந்த ஓவரில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அதிரடிக்கு மாறிய ரஸல், 18-வது ஓவரில் 19 ரன்கள் எடுக்க, ஆட்டம் பரபரப்பின் எல்லைக்கு சென்றது. கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட, 19-வது ஓவரில் 21 ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி வெற்றிக்கு அருகில் சென்றது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, ஷகிப் அல் ஹஸன் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ரஸல் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் இளம் வீரர் கில் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட, அடுத்த பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், அடுத்த பந்தை சிக்ஸராக மாற்றி கொல்கத்தாவை வெற்றிபெறச் செய்தார். இறுதியாக கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. அதிரடியாக ஆடிய ரஸல் 19 பந்துகளில் 49 ரன்களும், கில் 10 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.