தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மும்பையின் அதிரடிக்கு ஈடுகொடுக்குமா பஞ்சாப்? - பும்ரா

மொகாலி: இன்றைய ஐபிஎல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அஷ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.

rohit

By

Published : Mar 30, 2019, 1:58 PM IST

12-வது ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் இன்றையப் போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இதுவரை இருஅணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் இருக்கிறது.

மும்பை அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மா - டி காக் இணையின் தொடக்கம், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங் என முதல் நான்கு இடங்களில் களமிறங்கும் வீரர்கள் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதால் மிகப்பெரிய இலக்கையும் எளிதாக விரட்டுவதற்கான அதீத பலத்துடன் உள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களில் பொல்லார்ட்-க்கு ஓய்வளித்து பென் கட்டிங்-க்கு வாய்ப்பளிக்கலாம். பாண்டியா சகோதரர்கள் வழக்கம்போல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்துவதற்கு காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ராவின் இறுதி ஓவர்களை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும், இல்லையென்றால் ஆட்டத்தை தனியாளாக மும்பையின் பக்கம் மாற்றிவிடுகிறார். கடந்த போட்டியின் கடைசி பந்தில் நோ-பால் வீசிய மலிங்கா, மார்க்கண்டே, இளம் வீரர் ரஷீக் சலாம், பரிந்தர் சரண் என பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசுவதால் மும்பை அணி மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

பும்ரா

பஞ்சாப் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், தொடக்க வீரர் ராகுல்-அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கூட்டணியை நம்பியே பஞ்சாப் அணி களமிறங்குகிறது. கடந்த இரண்டு போட்டியிலும் வெளிப்பட்ட கெய்லின் சிறப்பான ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தால் பஞ்சாப் அணி பெரிய இலக்கை அடையும் என்பது நிச்சயம். மேலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அகர்வால், மில்லர், சர்ஃப்ராஸ் கான், மந்தீப் சிங், கருண் நாயர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியின் பேட்டிங்கிற்கு ஈடுகொடுக்கலாம்.

கிறிஸ் கெய்ல்

பந்துவீச்சில் கேப்டன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரூ டை, சாம் கரண், முஜீப் உர் ரஹ்மான் என சிறந்த கூட்டணியை வைத்து சொல்லிக்கொள்ளும் அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது பஞ்சாப் அணிக்கு பின்னடைவையே ஏற்படுத்துகிறது. இரண்டு போட்டியிலும் பஞ்சாப் அணியின் சிறப்பான பேட்டிங் மட்டுமே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மொகாலி மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும். அதோடு, இரு அணிகளிலும் பேட்டிங் பக்கம் மிரட்டலாக உள்ளதால் பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details