ஐபிஎல் தொடரின் 12வது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. இதில் இதில், நடப்பு சாம்பியன் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பெங்களூரு அணி, சென்னை அணியின் துல்லியமான சுழற்பந்துவீச்சினால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. கோலி (6), மொயின் அலி (9), டிவில்லியர்ஸ் (9), ஹெட்மயர் (0), ஷிவம் துபே (2), காலின் டி கிராண்ட்ஹோம் (4) என பெங்களூரு வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு ஆர்சிபியின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடக்க வீரராக களமிறங்கிய பார்திவ் படேல் அணியின் 10வது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், 9 பெங்களூரு வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.
சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா தன்பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும், பிராவோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணி தனது மூன்றாவது குறைந்தப் பட்ச ஸ்கோரை அடித்துள்ளது.