ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பவர்-ப்ளே ஓவர்கள் முடிவில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடக்க வீரர் டி-காக் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ரோஹித் - சூர்யகுமார் யாதவ் இணைந்தனர். அதிரடியாக ஆடிய இந்த இணையைப் பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
சூர்யகுமார் யாதவ் அதிரடியில் பொளந்துகட்ட, மறுமுனையில் ரோஹித் நிதானமாக ஆடினார். பின்னர் 44 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் தொடரில் தனது 35ஆவது அரைசத்தைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் 16 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றிபெறச் செய்தார். இறுதியாக மும்பை அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 46 ரன்களும், ரோஹித் 55 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ப்ளே-ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பு ஹைதராபாத் அணி பெற்றுள்ளது.