இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கொல்கத்தாவை பேட்டிங் ஆடப் பணித்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, தொடக்க வீரர்களாக வார்னர் - பெயர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடக்கத்தில் பெயர்ஸ்டோவ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கரியப்பா தவறவிட, பின்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது இவ்விணை.
ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை சரியான விகிதத்தில் கொண்டுச் சென்ற இந்த இணை பவர்- ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை அபாரமாக சேர்த்தது. இதன்மூலம் இந்தப் தொடரின் பவர்-ப்ளே ஓவர்களில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற பெருமையை ஹைதராபாத் பெற்றது. மேலும் கரியப்பா வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்களை இருவரும் சேர்த்தனர்.