12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இன்றையைப் போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இருஅணிகள் ஆடிய முதல் போட்டியில் இருஅணிகளும் தோல்வியடைந்ததால், தொடரில் முதல் வெற்றியைப் பெற மிகப்பெரிய போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில், தடைக்கு பின்னர் வார்னர் திரும்பிவந்த முதல் போட்டியிலேயே 85 ரன்கள் விளாசி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். அதேபோல், பேயர்ஸ்டோவ், விஜய் சங்கர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷாகிப் அல் ஹசன், ரஹீத் கான் என அட்டகாசமாக பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. மேலும் கடந்த போட்டியில் காயத்தால் விளையாடாமல் இருந்த கேப்டன் வில்லியம்சன் திரும்புவார் என பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளதால் வார்னருடன் இணைந்து வில்லியன்சனும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நட்சத்திர வீரர் ரஷீத் கான், சித்தார்த் கவுல் என ஐபிஎல் அணிகளிலேயே சிறந்த பந்துவீச்சு கூட்டணியை கொண்டுள்ளது. ஆனாலும் கடந்த போட்டியில், ரஷீத் கானை தவிர யாரும் சிறப்பாக பந்துவீசாததால் ஹைதராபத் அணி தோல்வியை சந்தித்தது. ஹைதராபத் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி முடிவு செய்யப்படும்.