ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று விளையாடுகிறது. புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கும் அணிகள் விளையாடுவதால் வெற்றிக்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் வார்னர், பெயர்ஸ்டோவ், விஜய் சங்கர் ஆகியோரை நம்பியே பேட்டிங்கில் உள்ளது. கேப்டன் வில்லியம்சன் உட்பட மற்ற வீரர்கள் யாரும் நடுவரிசையில் சிறப்பாக ஆடாதது அணியின் வெற்றியைப் பாதித்துவருகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை பெற்றதுதான். எனவே வார்னர் - பெயர்ஸ்டோவ் ஆகியோரோடு மற்ற வீரர்களும் ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியின் விளிம்பிற்குச் சென்று தோல்வியடைந்து வருகிறது. தொடக்க வீரர் நரைன் தொடர்ந்து சொதப்பி வருவதால், மற்றத் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். தொடர்ந்து நன்றாக ஆடிவரும் கில், கார்த்திக், ரஸல், ராணா ஆகியோர் இந்தப் போட்டியிலும் நிச்சயம் அதனைத் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.