இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹானே - மன்கட் புகழ் பட்லர் இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கியது. பிரசித் கிருஷ்ணாவின் அபாரமான பந்துவீச்சால் கேப்டன் ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து பட்லர் - ஸ்மித் இணை ஜோடி சேர்ந்தது.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நிதானமாக ஸ்மித் - பட்லர் இணை எதிர்கொண்டது. இந்த இணையின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது. பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கிய பட்லர், ஹாரி பந்தில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில், தடைக்கு பின்னர் இந்த ஆண்டு அணிக்குத் திரும்பிய ஸ்மித் அட்டகாசமாக ஆடி அரைசதம் கடந்தார். இதனையடுத்து திரிபாதி 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 16 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்மித் களத்திலிருந்தனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் அட்டகாசமாக வீச, ராஜஸ்தான் அணியினர் ரன் குவிக்கத் தடுமாறினர். 18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 119 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பிரசித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது.
கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.