12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ராயல் லேஞர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, ரோஹித் ஷர்மா, டி காக் ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்த நிலையில், டி காக் 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மூன்றாவது வரிசையில் வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் மீண்டும் பேட்டிங்கில் ஃபார்முக்கு வந்த ரோஹித் ஷர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பு நழுவவிட்டார். பின், நான்காவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் மிரட்டலாக ஆடினார். சாஹல் வீசிய 14ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களாக மாற்றினார்.