12ஆவது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றும், 6 போட்டிகளில் தோல்வியடைந்தும் உள்ளது. இந்நிலையில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற வேண்டும் என்றால் கொல்கத்தா அணி இனி விளையாடவுள்ள எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதற்காக கொல்கத்தா அணி வீரர்கள் தங்கள் தலைநகரிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தை விடுத்து பயிற்சிக்காக மும்பை வான்கடே மைதானம் சென்றுள்ளனர். இதனால் கொல்கத்தா மைதானத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தா வீரர் ரஸல் ராஜஸ்தான் செல்ல, கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் மும்பை மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கொல்கத்தா அணி நிர்வாகம் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தொடர்ந்து பயணம் செய்து வருவதால், வீரர்களின் உடல் சோர்வடைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் போட்டிகளினிடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தங்களுக்கு ஏற்ற இடங்களில் வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அதேபோல் கொல்கத்தா மைதானங்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கேள்வி எழுந்த நிலையில் கொல்கத்தா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மைதானத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனத் தெரியவில்லை. இதுவரை சிறந்த வசதிகளைதான் கொடுத்து வந்துள்ளோம். அதேபோல் ஒவ்வொரு அணியினருக்கும் தங்களுக்கு தேவையானதை செய்யும் உரிமை உள்ளது" எனத் தெரிவித்தார்.
நாளை மறுநாள் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அனியை எதிர்கொள்ளவிருக்கிறது.