ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. அதில் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தல தோனியின் அதிரடியான ஆட்டத்தால் முதல் 5 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி பந்தை தவறவிட தாகூர் ரன் அவுட் செய்யப்பட்டு, ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி 48 பந்துகள் எதிர்கொண்டு 84 ரன்களை சேர்த்தார். அதில் 7 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளைப் படைத்தார்.
ஐபிஎல் தொடர்களில் தோனி இதுவரை, பஞ்சாப் அணிக்கு எதிராக எடுத்த 79 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியிருந்தது. இந்நிலையில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது அதிகபட்ச ஸ்கோரை அவர் பதிவு செய்தார்.