12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டைத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான 50ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் டெல்லியின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர். 6 பந்துகளை எதிர்கொண்ட வாட்சன் ரன் ஏதும் அடிக்கமால் டக் அவுட் உடன் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, டு பிளசிஸுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
டு பிளசிஸ் 39 ரன்களில் நடையைக் கட்டினாலும், மறுமுனையில், பொறுப்புடன் ஆடிய ரெய்னா, 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், சென்னை அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்களை எடுத்திருந்தது.
இதன் மூலம் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் 50 அரை சதங்களை பூர்த்தி செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த ஜடேஜா 10 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 25 ரன்களில் நடையைக் கட்ட, இறுதிக் கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடினார். குறிப்பாக, போல்ட் வீசிய கடைசி ஓவரில் தோனி கடைசி இரண்டு பந்துகளில் சிக்சர் விளாசி 19 ரன்களை சேர்த்தார்.
இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. 22 பந்துகளை எதிர்கொண்ட தோனி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ஜெகதீசா சுசித் இரண்டு, கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.