இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இதில் கொல்கத்தா அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வென்றுள்ளது. டெல்லி அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, ராணா, ரஸல், தினேஷ் கார்த்திக், கில் என ஆக்ரோஷமான பேட்டிங் கூட்டணியோடு களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறது. அதிலும் அதிரடி வீரர் ரஸலைக் கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
பேட்டின் எந்த பகுதியில் பந்துபட்டாலும் சிக்ஸராக மாற்றி பந்துவீச்சாளர்களை சிதறடிக்கிறார் ரஸல். இவரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றல் இவரது விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே முடியும். ஏனென்றால் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக இருந்தார்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் சரியான திட்டமிடலுடன், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து சிறப்பாக வழிநடத்துகிறார்.
டெல்லி அணியைப் பொறுத்தவரையில், ப்ரித்வி ஷா, தவான், ஸ்ரேயஸ் ஐயர், காலின் இங்ரம், ரிஷப் பந்த் என இளம் வீரர்களுடம் களமிறங்கினாலும் ரிஷப் பந்த் மட்டுமே அணியின் நம்பிக்கையாக இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும். தவான் தொடர்ந்து நன்றாக ஆடினாலும், வேகமாக ரன்கள் குவிக்கத் தவறுவதால் அணியின் ஸ்கோரைப் பாதிக்கிறது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நல்ல தொடக்கம் கிடைத்தும் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறுவதால், இதுரிஷப் பந்த்-ற்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் கீமோ பவுல் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் இந்த போட்டியில் களமிறங்குவது சந்தேகமே. பந்துவீச்சில் ரபாடா, போல்ட், இஷாந்த் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றனர். அக்ஸர் படேல் மற்றும் ராகுல் டிவாட்டியா ஸ்பின் பந்துவீச்சில் பங்களிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே கொல்கத்தா அணியை வீழ்த்த முடியும்.
அதிரடி வீரர் ரஸலுக்கு டெல்லி பந்துவீச்சாளர் ரபாடா ஈடுகொடுப்பாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் இதற்கான விடை தெரிந்துவிடும்.
மேலும் டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் இணைந்துள்ளதால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் அதிகரித்துள்ளது. டெல்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி அணி பெற்ற தோல்விக்கு இன்றையப் போட்டியில் ஈடுகட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.