ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய டென்லி, இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே போல்டானார். பின்னர் வந்த அனுபவ வீரர் உத்தப்பா, சுப்மேன் கில்லுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.
பின்னர் ராபின் உத்தப்பா 28, ராணா 11 ரன்களில் வெளியேற சுப்மேன் கில் மட்டும் அரை சதத்தை கடந்து கொல்கத்தா அணிக்கு ஆறுதல் அளித்தார். மேலும், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்னிலும், பிராத்வெய்ட் 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டரான ரஸல் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை எகிறச் செய்தார். அவர் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்களை குவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்தாலும், அடுத்த இரண்டு ஓவர்களில் அந்த அணி எழுச்சி கண்டது. மூன்றாவது ஓவரில் அந்த அணி 32 ரன்களை எட்டியபோது பிரித்வி ஷா 14 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸும் 6 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தவான் - ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பாக ஆடத் தெடங்கியது. இருவரும் இணைந்து 100 ரன்களுக்கும் மேல் கடந்திருந்த சூழலில், ரிஷப் பண்ட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கோலின் இங்கரம் 6 பந்தில் 14 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதனால் டெல்லி அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை எடுத்தது. இதனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. சிறப்பாக ஆடிய தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார்.