இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் மற்றும் அதிரடி மன்னன் ரஸல் என மிரட்டலான பேட்டிங் வரிசையைக் கொண்டு மிகப்பெரிய இலக்கையும் எளிதாக துரத்தி வென்றுவருகிறது. அதேபோல், பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, ஹார்ரி குர்னே ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் பலவீனமில்லாத அணியாக வலம்வருகிறது.
சென்னை அணியைப் பொறுத்தவரையில் வாட்சன், டூ பிளஸிஸ், தோனி, ஜாதவ் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ஆறுதலளிக்கின்றனர். சின்ன தல ரெய்னா மற்றும் ராயுடு ஃபார்மில் இல்லாததால் சேஸிங்கின்போது சென்னை அணியை பலவீனமடைகிறது. பந்துவீச்சில் ஹர்பஜன், தாஹிர், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றனர். இறுதி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோவுக்கு பதிலாக புதிதாக இணைந்த குஜ்லஜின் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளிக்கிறார்.