ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜோஃப்ரே ஆர்ச்சர், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடருக்கு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகவுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ்அணியில் ஆடிய ஜோஃப்ரே ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை கனவாக கொண்டு கிரிக்கெட் விளையாடிவந்தார். இவரது தந்தை இங்கிலாந்து குடியுரிமை வைத்திருந்தாலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின்படி 7 ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க வேண்டும்.
தற்போது இந்த கால அளவீட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளதால், ஆர்ச்சர் தனது கனவு அணியான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'இந்த வாய்ப்புக்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இங்கிலாந்து அணியில் விளையாடுவதற்கு நான் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். அதற்காக நிறைய பயிற்சி எடுத்து வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலை கொள்வதற்கு எதுவும் இல்லை. தற்போது எனது கவனம் பாகிஸ்தான் தொடரில் மட்டுமே இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோருடன் இணைந்து விளையாடுவது நல்ல அனுபவமாக உள்ளது. இங்கிலாந்து அணிக்குள் செல்லும்போது தெரிந்த முகங்கள் இருப்பது நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும்' என நெகழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.