சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை,வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால், இறுதிப்போட்டிக்கு முடிவை அறிய ஆறாவது நாளான (ரிசர்வ் டே) இன்றும் (ஜுன் 23) விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
கோலியும் ஜேமீசனும்
இன்றைய ஆட்டத்தை புஜாரா 12 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் தொடங்கினர். விராட் கோலி நேற்று கடைசி நேரத்தில் கோலியிடம் தென்பட்ட ஆக்ரோஷம் இன்று அவரிடம் தென்படவில்லை.
கோலி தடுமாறுவதைக் கண்ட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஜேமீசனை பயன்படுத்திக்கொண்டே இருந்தார். அதன்படி, ஜேமீசன் - வில்லியம்சன் கூட்டணி விரித்த வலையில் கோலி சிக்கினார்.
கோலியும் ஜேமீசனும் மோதியுள்ள ஆறு இன்னிங்ஸ்களில், இந்த விக்கெட்டை சேர்த்து மூன்றாவது முறையாக கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் ஜேமீசன்.
திணறும் மிடில்
ஜேமீசனின் அந்த எக்ஸ்டரா பவுன்ஸ் பந்தை கடைசி நேரத்தில் தட்டிவிட முயன்ற கோலி, வாட்லிங் கையில் கேட்ச் கொடுத்து 13 (29) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின், ஜேமீசன் வீசிய அவரின் அடுத்த ஓவரில் புஜாராவும் 15(80) ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். கடைசிவரை நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துணைக் கேப்டன் ரஹானே 15 (40) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.