சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்ட்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டி இதுவரை...
இறுதிபோட்டியின் முதல் நாள் (ஜுன் 18) ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் (ஜுன் 19) டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதைத்தொடர்ந்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜேமீசன் 5 விக்கெட்டை கைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
நேற்றைய (ஜுன் 20) மூன்றாம் நாளின் இரண்டாம் செஷனில், பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்து இந்திய அணியை விட 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இனிமேல் இறுதிப்போட்டி...?
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லேத்தம் 30 ரன்களிலும், கான்வே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின்,இஷாந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய நான்காம் ஆட்டம் வழக்கம்போல் மதியம் 3 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழைக்காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், முதல் செஷன் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்றைய ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.