ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக விளங்கிய செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸ்
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி, முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை எடுத்தது. அடுத்த பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 229 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
வலுவான தென்னாப்பிரிக்கா
27 ரன்கள் பின்தங்கிய நிலையில், களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ராகுல், அகர்வால் பெரிதும் ஏமாற்றத்தை அளித்தனர். இதனால், புஜாரா - ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அரைசதம் கடந்த பின்னர் ஆட்டமிழக்க, இந்திய அணி 266 ரன்களை எடுத்து, 239 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு ரபாடா, இங்கிடி, ஓலிவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனிலேயே இந்தியா ஆல்-அவுட்டாக, முழுதாக இரண்டரை நாள்கள் கையிலிருக்க 240 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. மூன்றாவது நாளின் 40 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா, 2 விக்கெட்டுகளை 118 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.