சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு இடையில் நடைபெறுகிறது.
2ஆம் நாள் ஆட்டம் ரத்து
முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரின் சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. கே.எல். ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்பின்னர், இரண்டாம் நாள் (டிசம்பர் 27) தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக ரத்தானது.
திணறிய இந்தியா
இதையடுத்து, மூன்றாம் ஆட்டம் நேற்று (டிசம்பர் 28) தொடங்கியது. சதம் அடித்து சிறப்பாக விளையாடி வந்த ராகுல் 123 ரன்களுக்கு ரபாடாவிடம் வீழ்ந்தார்.
தொடர்ந்து, ரஹானே 48, அஸ்வின் 4, ரிஷப் பந்த் 8, ஷர்துல் தாக்கூர் 4, ஷமி 8 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 308 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் தொடங்கி 36 ரன்களை மட்டும் எடுத்த இந்திய அணி, அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிடி 6/72
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பும்ரா, சிராஜ் ஆகியோர் சிறிதுநேரம் தாக்குபிடித்தனர். பும்ரா 14 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 327 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஜன்சென் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. பும்ரா வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கேப்டன் டீன் எல்கர் 1 ரன்னில் வெளியேறினார்.
பவுமா அரைசதம்
இதனால், மதிய உணவு இடைவேளை வரை, தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களை எடுத்தது. இடைவேளைக்கு பின்னர் உடனடியாக கீகன் பீட்டர்சன் விக்கெட்டை ஷமி வீழ்த்தினார். அடுத்த வந்த மார்க்ரம 13 ரன்களிலும், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 3 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
பின்னர், டெம்பா பவுமா உடன் குவின்டன் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, ஐந்தாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்திருந்தபோது, டி காக் 34 ரன்களில் தாக்கூர் பந்தில் போல்டாகி வெளியேற, அடுத்த வந்த முல்டர் 12 ரன்களில் ஷமியிடம் வீழ்ந்தார்.
ஷமி 200*
அரைசதம் கடந்த பவுமா விக்கெட்டையும் ஷமி வீழ்த்த, தென்னாப்பிரிக்கா 144 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து, வந்த பந்துவீச்சாளர்களான ஜன்சென் 19, ரபாடா 25, கேசவ் மகாராஜ் 12 என ஓரளவு ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 197 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, தாக்கூர் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும், ஷமி இந்த 5 விக்கெட்டுகள் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
பின்னர், 130 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாம் ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் மயாங்க் அகர்வால் 4 ரன்களுக்கு ஜன்சனிடம் ஆட்டமிழந்தார். இதனால், நைட் வாட்ச்மேனாக தாக்கூர் களமிறங்கி கடைசி பந்தில் பவுண்டரியையும் விரட்டினார்.
இதன்மூலம், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல், தாக்கூர் களத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 146 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம், இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.
இதையும் படிங்க: Australia retain the Ashes: இன்னிங்ஸ் வெற்றி; ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸி.,