ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக விளங்கிய செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
முதல் நாள் ஆட்டம்
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார்.
தென்னாப்பிரிக்கா அணியில் டி காக் திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றதால் விக்கெட் கீப்பராக அறிமுக வீரர் கையில் வெரியைன் களமிறக்கப்பட்டார். முல்டர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஓலிவர் அணியில் சேர்க்கப்பட்டார்.
எல்கர் - பீட்டர்சன் அபாரம்
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில், 35/1 என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் (ஜனவரி 4) நடைபெற்றது. கேப்டன் டீன் எல்கர் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். மேலும், முதல் நாளில் சிராஜுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இரண்டாம் நாளில் பந்து வீசுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கத்தைப்போல் இல்லையென்றாலும் அவர் ஒரளவுக்கு பந்து வீசினார்.
ஷாக்... ஷாக்... ஷர்துல்
எல்கர், பீட்டர்சன் ஜோடி நேற்று ஏறத்தாழ 20 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்தது. எல்கர் அனைத்து பந்துகளையும் நிதானமாக எதிர்கொள்ள, பீட்டர்சனோ பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை வெளுத்துவாங்கி ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.
நீண்டநேரம் கழித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தார். முதல் ஓவரை சமாளித்த தென்னாப்பிரிக்க ஜோடி, அவரின் இரண்டாவது ஓவரில் உடைந்தது. தாக்கூர் வீசிய 39ஆவது ஓவரில் கேப்டன் எல்கர் 28 ரன்களில் பந்திடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.
தாக்கூரின் அடுத்தடுத்த ஓவர்களில் முறையே (43ஆவது ஓவர், 45ஆவது ஓவர் ) அரைசதம் கடந்திருந்த பீட்டர்சன் 62 ரன்களிலும், ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் 1 ரன்னிலும் வீழந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.