சென்சூரியன்: SA vs IND Boxing Day Test: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு இடையில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற விராட்
முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரின் சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 27) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை (28 ஓவர்கள்), இந்த இணை விக்கெட்டுகளை இழக்காமல் 83 ரன்களை எடுத்தது.
வெளுந்து வாங்கிய ஓப்பனர்கள்
இடைவேளைக்கு பின்னரும் இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. மயாங்க் அகர்வால் 89 பந்துகளில் அரைசதம் கடக்க, கே.எல். ராகுல் பொறுமையான விளையாடி வந்தார்.
அப்போது, இங்கிடி வீசிய 41ஆவது ஓவரில், அகர்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 117 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, களம்கண்ட மூத்த வீரர் புஜாரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர், களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி, ராகுலுடன் இணைந்து சீராக ஸ்கோரை உயர்த்தினார். ராகுல் 118 பந்துகளில் அரைசதத்தை பதிவுசெய்தார். தேநீர் இடைவேளை வரை (57 ஓவர்கள்) இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.
கோலி மீண்டும் ஏமாற்றம்
ரபாடா ஒருபுறம் நல்ல லெந்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்த நிலையிலும், இங்கிடி தவிர்த்து வேறு பந்துவீச்சாளர்கள் யாரும் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால், செட்-அப் செய்து அவர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.
களத்தில் செட்டிலான கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மூன்றாம் செஷனை தொடங்கினர். செஷன் தொடங்கிய 11 ஓவர்கள் தாக்குபிடித்த இந்த இணையை, லுங்கி இங்கிடி பிரித்தார்.
அவர் வீசிய அவுட்-சைட் ஆஃப் பந்தில் விராட் கோலி கவர் டிரைவ் ஆட முயன்றார். பந்து பேட்டின் டிப்பில் பட்டு முதல் சிலிப்பில் இருந்த முல்டரிடம் தஞ்சம் புகுந்தது. விராட் கோலி நான்கு பவுண்டரிகள் உள்பட 35 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்ப, அஜிங்கயா ரஹானே அடுத்து களமிறங்கினார்.
களத்தில் ராகுல், ரஹானே
மிகுந்த நெருக்கடியில் களமிறங்கிய ரஹானே, தன்னம்பிக்கையுடன் பெரிய ஷாட்களை ஆடி பவுண்டரிகளை குவித்தார். மறுமுனையில், நீண்ட நேரமாக களத்தில் நின்ற ராகுல், 218 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரின் ஏழாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி கட்டத்தில் (80 ஓவர்கள்) புது பந்தை தென்னாப்பிரிக்கா எடுத்தது. இருப்பினும், அவர்களால் இந்திய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.
இதன்மூலம், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் (90 ஓவர்கள்) 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 272 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இன்றைய (டிசம்பர் 27) இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.
முதல் நாள் ஆட்டம்
- முதல் செஷன்: 28 ஓவர்கள் - இந்தியா - 83/0
- இரண்டாம் செஷன்: 29 ஓவர்கள் - இந்தியா - 74/2
- மூன்றாம் செஷன்: 33 ஓவர்கள் - இந்தியா - 115/1
இதையும் படிங்க: Ashes Boxing Day Test: முதல் நாளில் இங்கிலாந்து பரிதாபம்; ஆஸி., அட்டகாசம்