தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: லண்டன் தாதா கோலி; லார்ட்ஸில் வென்றது இந்தியா! - ஆட்டநாயகன் கே எல் ராகுல்

லார்ட்ஸில் வென்றது இந்தியா!
லார்ட்ஸில் வென்றது இந்தியா!

By

Published : Aug 16, 2021, 11:29 PM IST

Updated : Aug 17, 2021, 8:13 AM IST

23:07 August 16

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஏழு ஆண்டுகளுக்கு பின் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் (இங்கிலாந்து): இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பழமை வாய்ந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) அன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் பிராட், லாரன்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஹசீப் ஹமீத், மொயின் அலி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூருக்கு பதில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.

கடைசி நாள்... கடைசி செஷன்...

முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்தது. இதையடுத்து, தனது இரண்டாம் இன்னிங்ஸை 298 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இந்தியா இங்கிலாந்து அணிக்கு 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதன்பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், சிப்ளி ரன் ஏதும் இன்றியும், ஹசீப் 9 ரன்களுக்கும், பேர்ஸ்டோவ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், தேநீர் இடைவேளை முன்னர்வரை இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை எடுத்திருந்து. அனுபவ வீரர்கள் ரூட், பட்லர் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

கடைசி கட்டமான மூன்றாவது செஷனில் 38 ஓவர்களும், 6 விக்கெட்டுகளும் இங்கிலாந்துக்கு கைவசம் இருக்க, வெற்றிக்கு 211 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியோ 6 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மூன்றாவது செஷனனை ஆரம்பித்தது.

ரூட் க்ளியர்...

இத்தொடரில், விளையாடிய மூன்று இன்னிங்ஸில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என அடித்து மிரட்டலான ஃபார்மில் இருந்தார் கேப்டன் ஜோ ரூட். அவர் களத்தில் நிலைத்துவிட்டால், இந்தியாவின் வெற்றிக்கனவு பொய்த்துவிடும் என்பதால் ரூட் விக்கெட் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அப்படியிருக்க, மூன்றாவது செஷனின் முதல் ஓவரில், பும்ரா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து, ரூட் 33 ரன்களில் நடையைக் கட்டினார்.

கோட்டைவிட்ட கோலி

ரூட் வெளியேற்றிவிட்டதால் பாதி வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்ற இந்திய வேகக்கூட்டணி துடியாய் துடித்தது. பட்லர் 2 ரன்கள் எடுத்திருந்தபோதுஅவரும் கோலியிடமே கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த எளிமையான கேட்சை கோலி தவறவிட்டு அதிர்ச்சியளித்தார்.

கேம் சேஞ்சர் சிராஜ்

இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்லர் சிறிதுநேரம் இந்திய வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களின் பொறுமையையும் சோதித்தார். மறுமுனையில், மொயின் அலியும் அரணாக நின்று ஆடினார். ஏறத்தாழ 16 ஓவர்கள் நிலைத்த இணையை சிராஜ் உடைத்தெறிந்தார்.

மொயின் அலி 13 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த சாம் கரண், சிராஜ் பந்துவீச்சில் கடந்த இன்னிங்ஸை போலவே இதிலும் கோல்டன்-டக் ஆகி வெளியேறினார்.

இன்னும் இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், பட்லர் களத்தில் நின்று ஆட்டத்தை டிராவை நோக்கி கொண்டு சென்றார். ஒன்பதாவது வீரராக களமிறங்கிய ராபின்சனும் பட்லருக்கு துணையாக நின்று ஆடினார். இந்த இணை 12 ஓவர்களுக்கு நீடித்தது.

பணிந்தார் பட்லர்

இந்நிலையில், பும்ரா பந்துவீச்சில் ராபின்சன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராபின்சன் ஆட்டமிழக்கும் போது, போட்டியை டிராவாக்க 9 ஓவர்களும், 2 விக்கெட்டுகளும் கையிலிருந்தது.

பட்லர் இங்கிலாந்து அணியை மீட்டு விடுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் சிராஜ் பந்துவீச்சில் அவர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதற்கடுத்த மூன்றாவது பந்தில் ஆண்டர்சனும் சிராஜிடம் போல்டாக, இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. இந்தியா பந்துவீச்சில் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த இரண்டு விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
கபில், தோனி வரிசையில் கோலி

இதுவரை இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் கபில் தேவ் தலைமையில் 1986ஆம் ஆண்டும், மகேந்திர சிங் தோனி தலைமையில் 2014ஆம் ஆண்டும்தான் வென்றுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள எமரால்ட் ஹெட்டிங்லே மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) புள்ளிப்பட்டியலில் இந்தியா 1 வெற்றி, 1 டிரா என 14 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

ஆட்ட நாயகன்: கே.எல். ராகுல்

போட்டி சுருக்கம்: இந்தியா - 364 & 298/8 ; இங்கிலாந்து - 391 & 120

இதையும் படிங்க:ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

Last Updated : Aug 17, 2021, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details