லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலைப் பெற்றுள்ளது.
இந்தியா ஆல்-அவுட்
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நேற்று (செப். 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் (61.3) 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 36 பந்துகளைச் சந்தித்து, 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்களை குவித்தார். அவரைத் அடுத்து கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்தார்.
தொடக்கம் தடுமாற்றம்
இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் 3 விக்கெட்டையும், ஓவர்டன், ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீத், ரோரி பர்னஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால், பும்ரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாம் பந்தில் பர்ன்ஸ் 5 ரன்களிலும், கடைசி பந்தில் ஹமீத் ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழந்து வெளியேற, இங்கிலாந்து 6 ரன்களுக்கு 2 விக்கெட்டைகளை இழந்து தடுமாறியது.
ஆனால், மூன்றாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மலான், ஜோ ரூட் ஆகியோர் இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டனர். இருவரும், ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருந்து ரன்களை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதனால், 13ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து 50 ரன்களை கடந்து அசத்தியது.
ரூட்டை ஊதித்தள்ளிய உமேஷ்
முரட்டு ஃபராமில் இருந்த ரூட்டின் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் திணறிக்கொண்டிருந்தனர். அப்படியிருக்க, உமேஷ் யாதவ் வந்த முதல் போட்டியிலேயே ஒரு ஸ்லோவர்-இன் (Slower In) டெலிவரியை வீசி ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், ரூட் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஓவர்டன் பும்ரா வீசிய முதல் ஆட்டத்தின் கடைசி ஓவரை தாக்குப்பிடிக்க, இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் (17 ஓவர்) 3 விக்கெட்டுகளைக்கு 53 ரன்களை எடுத்துள்ளது.
டேவிட் மலான் 26 ரன்களுடனும், ஓவர்டன் 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம், இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (செப். 3) மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: கிங் கோலியின் புதிய சாதனை; நிற்காது இந்த ரன் மெஷின்