தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

THE OVAL TEST: அஸ்வின் எனும் துருப்புச் சீட்டை பயன்படுத்துவாரா கோலி? - அஸ்வின்

ஓவல் மைதானம் காலங்காலமாக சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால், உலகின் முதல்தர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை அணிக்கு அழைப்பதுதான், இடிந்து கிடக்கும் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வழி. இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படும்பட்சத்தில் ரூட் vs அஸ்வின் என்ற போரை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

RAVICHANDRAN ASHWIN, VIRAT KHOLI, ENG vs IND
RAVICHANDRAN ASHWIN, VIRAT KHOLI, ENG vs IND

By

Published : Sep 2, 2021, 12:07 PM IST

லண்டன்:எப்போதும் வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியா, ஒரு போட்டியிலாவது தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிடும். இந்தியா மட்டுமல்ல பிற நாடுகளும்கூட, வேறொரு நாட்டிற்கு சென்று விளையாடும்போது ஓரிரு போட்டியில் சொதப்பலாக ஆடுவது வாடிக்கைதான்.

கடந்த 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் (அடிலெய்ட்) இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது; நடப்பாண்டு தொடக்கத்தில் இந்திய பயணத்தின்போது (அகமதாபாத்) இங்கிலாந்து அணி 82 ரன்களுக்கு சுருண்டது என இவையெல்லாம் இந்திய – இங்கிலாந்து அணிகள், அந்நிய மண்ணில் சமீபத்தில் சந்தித்த மோசமான தோல்விகள்.

லார்ட்ஸும் லீட்ஸும்

அதேபோல, இம்முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவி மிகவும் கவலைக்கிடமான வகையில் தோற்றமளிக்கிறது. அதுவும், லார்ட்ஸ் டெஸ்ட்டில் 151 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதே இந்திய அணிதான் அடுத்து நடந்த லீட்ஸ் டெஸ்டில் பரிதாபகரமாக விளையாடியது.

இவையெல்லாம், இன்று (செப். 2) ஓவல் மைதானத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் இந்திய அணிக்கு அழுத்தத்தை தராது என்பதற்கான உதாரணங்கள்தான் மேற்கூறியவை. அப்படியென்றால், இந்தியாவுக்கு அழுத்தமோ, பலவீனமோ இல்லையா என்று கேட்டால், இருக்கு ஆனா இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

என்னவென்று சொல்லவதம்மா...

வல்லுநர்கள், பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள், சிறார்கள் என இந்திய அணியை உற்றுநோக்கும் அனைவருக்கும் தெரியும், இந்திய அணியின் படு-வீக்கான மிடில் ஆர்டரை பற்றி. இருப்பினும், கடைசி போட்டியில் புஜாராவின் 91, கோலியின் 55 ரன்களை கண்டுகொள்ளாமல் கடக்க முடியாது. எனினும் அவர்கள் அதேபோன்ற ஆட்டத்தை இனி வரும் போட்டிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.

அதேபோல், துணை கேப்டன் ரஹானே மெல்போர்னில் சதம், லார்ட்ஸில் அரைசதம் என தனது இயல்பான ஆட்டத்தை அவ்வப்போது ஆடுகிறார். இப்படி அணியின் முக்கிய வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை நிலையாக ஆடாததுதான் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது.

அவர் வருவாரா...?

அடுத்து, இந்திய அணியில் ஒற்றை ஆல்-ரவுண்டராக வலம் வரும் ஜடேஜா பெரிய அளவில் இத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓவல் மைதானம் காலங்காலமாக சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை அணிக்கு அழைப்பதுதான் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வழி.

அவர் ஜடேஜா இடத்தை நிரப்புவாரா அல்லது ஒரு வேகப்பந்துவீச்சாளர் பென்ச்சில் அமரவைக்கப்பட்டு ஜடேஜா, அஸ்வின் இருவரும் விளையாடுவார்களா என்பது கோலிக்கும், சாஸ்திரிக்கும் வெளிச்சம். ஆனால், கோலி தனது 4:1 (4 வேகங்கள், 1 சுழல்) என்ற ஃபார்மட்டை மாற்ற வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.

பிரசித்தின் வருகை

மேலும், வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் ஆகியோர் இத்தொடரில் 100 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியுள்ளனர். ஷமி 97 ஓவர்களும், இஷாந்த் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 56 ஓவர்களையும் வீசியுள்ளனர். இதனால், ஒரு புது வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கவும் வாய்ப்புள்ளது.

அதற்கு ஏற்றதுபோல், இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சமீபத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இப்போட்டியில், அவர் சேர்க்கப்படாவிட்டாலும், அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மாறுமா கோலியின் டெம்ப்ளேட்

மேலும், கூடுதல் பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்று மூத்த இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் போன்ற பலரும் தெரிவித்திருந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம்பெறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஷர்துல் பேட்டிங்கிலும் ஓரளவிற்கு பங்களிப்பார் எனும்போது இந்த நகர்வு கோலிக்கு பயனளிக்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டருக்கு சூர்யகுமார் யாதவ், அனுமா விஹாரி ஆகியோரின் பெயர்களும் அடிப்படுகிறது என்பதை மறுக்க இயலாது.

பட்லர் அவுட்; வோக்ஸ் இன்

இங்கிலாந்தை பொறுத்தவரை கேப்டன் ரூட் இந்த தொடரில் 500 ரன்களுக்கு மேலாக குவித்து அசைக்க முடியாத ஃபார்மில் இருந்து வருகிறார். இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படும்பட்சத்தில் ரூட் vs அஸ்வின் என்ற போரை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இதையடுத்து, விக்கெட் கீப்பர் பட்லர் தனது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள காரணத்தால், நான்காவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். மேலும், மொயின் அலி துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியின் வெற்றி, துவண்டு போயிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கும். அதே உத்வேகத்துடன், இந்த நான்காவது போட்டியையும் அவர்கள் அணுகுவார்கள் என்பதால் இந்தியா கூடுதல் கவனத்துடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பேத நிதர்சனம்.

உத்தேச பிளேயிங் XI

இந்திய அணி:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, மயங்க் அகர்வால், அஜிங்கயா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), டோம் பெஸ், மொயின் அலி (துணை கேப்டன்), ஜோசப் பர்ன்ஸ், ஜாக் க்ராலி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஓல்லி போப், ராபின்சன், டோம் சிப்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்

இதையும் படிங்க: கோலியை முந்தினார் ரோஹித்; மீண்டு(ம்) வருவாரா ஃபேப் ஃபோரில்?

ABOUT THE AUTHOR

...view details