லண்டன் (இங்கிலாந்து): இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆக. 12) தொடங்கியது. இந்நிலையில், முதல் நாளில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான, இன்றும் (ஆக. 13) ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, மதிய இடைவேளைக்கு முன்னர்வரை, 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களை சேர்த்திருந்தது.
இதையடுத்து, இரண்டாம் நாளின் இரண்டாவது செஷனை ஜடேஜா 31 ரன்களுடனும், இஷாந்த சர்மா ரன் ஏதுமின்றியும் தொடங்கினர்.
ஆண்டர்சன் ஆட்டம்
சிறிதுநேரம் சமாளித்து வந்த இஷாந்த் 8 ரன்களிலும், பும்ரா ரன் ஏதுமின்றியும் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தனர். இது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் எடுக்கும் 31ஆவது ஐந்து விக்கெட் - ஹால் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த போட்டியைப் போன்று இதிலும் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, 40 ரன்கள் எடுத்தபோது மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்களை குவித்துள்ளது.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 129, ரோஹித் 83, விராட் கோலி 42, ஜடேஜா 40, ரிஷப் பந்த் 37 ரன்களை எடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜோசப் பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி ஆகியோர் தற்போது களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: ’இப்போ வெண்கலம் ஓகே, ஆனா நெக்ஸ்ட் தங்கம்தான்...’ - லவ்லினா!