லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) தொடங்கியது. இப்போட்டியில் மூன்று நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்துள்ளது.
இன்றைய (ஆக. 15) நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மதிய உணவு இடைவேளை வரை, 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்து 29 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
முதலாவது செஷன்
இந்நிலையில், புஜாரா 3 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னிலும் மதிய உணவு இடைவேளைக்கு பின்னான இரண்டாம் செஷன் ஆட்டத்தை தொடங்கினர். முக்கிய வீரர்களான ராகுல், ரோஹித், கோலி வெளியேறிவிட்டதால் அணியை பெரும் முன்னிலை நோக்கி கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இந்த இந்த ஜோடிக்கு இருந்தது.
இதனால், அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கவும், தங்களது ஃபார்ம் குறித்த விமர்சனங்களைப் போக்கவும் இருவரும் மிக நிதானமாக விளையாடினர்.