லண்டன்(இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) தொடங்கியது.
இப்போட்டியில் மூன்று நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்துள்ளது.
முறிந்தது ஓப்பனிங்
இந்நிலையில், இன்றைய (ஆக. 15) நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியை விட 27 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், கே.எல். ராகுல் - ரோஹித் சர்மா இணை களமிறங்கியது.
கடந்த இன்னிங்ஸில் நூறு ரன்களைச் சேர்த்த ராகுல், இந்த இன்னிங்ஸில் 5 ரன்களிலேயே மார்க் வுட் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதையடுத்து, இந்திய அணி 27 ரன்களை எடுத்து சமநிலை பெற்றது.
அந்த சமயத்தில், மார்க் வுட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் ரோஹித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு இரண்டு பந்துகளுக்கு முன்னர்தான் அதே ஷார்ட் பிட்ச் பந்தில் ரோகித் சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது.