லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஆக. 12) தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 129, ரோஹித் 83, விராட் கோலி 42, ஜடேஜா 40, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ரூட், பேர்ஸ்டோவ் அரைசதம்
நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் இன்றைய (ஆக. 14) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இரண்டாவது ஓவரிலேயே அரை சதத்தை கடந்த ஜோ ரூட், இந்த தொடரில் தான் விளையாடி மூன்று இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து மிரட்டியுள்ளார். பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ் என வேகக்கூட்டணி எவ்வளவு முயன்றும் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. ஜடேஜாவின் சுழலும் எடுபடவில்லை.
மதிய உணவு இடைவேளை
ஜோ ரூட் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்க, பேர்ஸ்டோவ் தனது 23ஆவது டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவ் 19 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரை சதம் அடித்திருப்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்னர்வரை (73 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 89 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர், கேப்டன் ஜோ ரூட் சதத்தை நோக்கி நிதானமாக சென்றுகொண்டிருந்தார். மறுமுனையில், நிலைத்து நின்று ஆடிவந்த பேர்ஸ்டோவ் 57 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார்.