லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஆக. 25) லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது.
முடிந்தது முதல் இன்னிங்ஸ்
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் (42.4 ஓவர்கள்) 78 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்து, இந்தியாவைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக ரூட் 121 ரன்களையும், மலான் 70 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ரோஹித் - புஜாரா
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று (ஆக. 27) இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித், ராகுல் இணை 19 ஓவர்கள் தாக்குபிடித்தது. கே.எல். ராகுல் 8 ரன்களில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் செஷன் முடிவுக்கு வந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை (19 ஓவர்கள்) இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்திருந்தது.
ரோஹித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா ரன் ஏதும் இன்றியும் இரண்டாம் செஷனை தொடங்கினர். கடந்த இன்னிங்ஸில் செய்த தவறுகளை உணர்ந்துகொண்டு, இருவரும் இன்று மிகவும் கட்டுப்பாட்டுடன் விளையாடினர். ஓவர்டன், ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் தொடர்ச்சியாக பந்துவீசியும் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை.