லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலைப் பெற்றுள்ளது.
முதல் நாள் முடிவில்
இதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நேற்று (செப். 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் (61.3) 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூர் 36 பந்துகளைச் சந்தித்து, 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 57 ரன்களைக் குவித்தார். அவரை அடுத்து கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் நான்கு விக்கெட்டுகளையும், ராபின்சன் மூன்று விக்கெட்டுகளையும், ஓவர்டன், ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
உமேஷ் 150
பின்னர், தனது பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், 17 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை எடுத்திருந்தது. இந்திய பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட்டையும், உமேஷ் 3 விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்நிலையில், பேர்ஸ்டோவ் 26 ரன்களுடனும், ஓவர்டன் 1 ரன்னுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேய ஓவர்டன் 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 150 விக்கெட்டைகளை வீழ்த்திய ஆறாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஆவார். இதையடுத்து, நன்றாக விளையாடிக்கொண்டிருந்த மலானும் 31 ரன்களில் உமேஷிடம் வீழ்ந்தார்.
முன்னிலையில் இங்கிலாந்து
அதன்பின்னர், ஒலி போப் உடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். இதன்மூலம், இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர்வரை (42 ஓவர்கள்), இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 52 ரன்கள் பின்தங்கியிருந்தது.
பேர்ஸ்டோவ் 34 ரன்களுடனும், போப் 38 ரன்களுடனும் இன்றைய இரண்டாம் செஷன் ஆட்டத்தைத் தொடங்கினர். அப்போது, சிராஜ் வீசிய 47ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 37 ரன்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.
தற்போது இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 62 ஓவர்களைப் பிடித்து 6 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்துள்ளது.
இதன்மூலம், இங்கிலாந்து இந்திய அணியைவிட 1 ரன் முன்னிலைப் பெற்றது. இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது. மேலும், இங்கிலாந்து அணியில் போப் 64 ரன்களுடனும், மொயின் அலி 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மிஸ் யூ அஸ்வின் - வருத்தப்படும் ரசிகர்கள்!