தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: இங்கிலாந்தின் வேகத்தில் சரிந்தது இந்தியா! - Rohit Sharma

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களில் ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து, களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடிவருகிறது.

இங்கிலாந்தின் வேகத்தில் சரிந்தது இந்தியா
இங்கிலாந்தின் வேகத்தில் சரிந்தது இந்தியா

By

Published : Aug 25, 2021, 8:57 PM IST

லீட்ஸ் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் இன்று (ஆக. 25) தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இரண்டாம் செஷன்

இதன்மூலம், முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னர்வரை, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்திருந்தது. ராகுல் 0, புஜாரா 1, விராட் 7, ரஹானே 18 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், ரோஹித் சர்மா 15 ரன்களுடனும், ரிஷப் பந்த் 0 ரன்னிலும் இரண்டாவது செஷனை தொடங்கினர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ரிஷப் பந்த் 2 ரன்களில் ராபின்சனிடம் வீழ்ந்தார்.

நீண்ட நேரம் களத்தில் இருந்த ரோஹித், 105 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்தபோது ஓவர்டன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதற்கு அடுத்த பந்தே, லார்ட்ஸ் நாயகன் ஷமி டக்-அவுட்டாகி வெளியேறினார். சாம் கரண் வீசிய அடுத்த ஓவரில், ஜடேஜா 4 ரன்களிலும், பும்ரா ரன்னேதும் இன்றியும் ஆட்டமிழக்க இந்தியா 67 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

சுருண்டது இந்தியா

கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் - சிராஜ் ஆகியோர் நிதானமாக 11 ரன்களைச் சேர்த்த நிலையில், ஓவர்டன் பந்துவீச்சில் சிராஜ் ஆட்டமிழக்க இந்தியா ஆல்-அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து பேட்டிங்

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளனர். மேலும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்தியா 22 ரன்களை மட்டும் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும்; ராபின்சன், சாம் கரண் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னிலை நோக்கி...

இதையடுத்து, பர்ன்ஸ், ஹசீப் ஹமீது ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், இங்கிலாந்து தேநீர் இடைவேளைக்கு முன்னர்வரை 7 ஓவர்களில் 21 ரன்களை எடுத்துள்ளது. பர்ன்ஸ் 3 ரன்களுடனும், ஹசீப் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதன்மூலம், 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவை விட 57 ரன்களே பின்தங்கி உள்ளது. மூன்றாவது செஷன் முழுமையாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய தினமே முன்னிலை பெறும் முனைப்பில் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

முதலாம் நாள் ஆட்டம் நிலவரம்

முதலாவது செஷன்: இந்தியா - 25.5 ஓவர்கள் - 56/4

இரண்டாவது செஷன்:இந்தியா - 14.5 ஓவர்கள் - 22/6;

இங்கிலாந்து - 7 ஓவர்கள் - 21/0

இதையும் படிங்க: WTC POINTS TABLE: முதல் இடத்தில் விராட் & கோ!

ABOUT THE AUTHOR

...view details