டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு டி20 போட்டிகளை விளையாட இருந்தது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல்
நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் தனிவிமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியை விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தச் சுழலில், கடந்த நவம்பர் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவை அடுத்து ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியது. இந்தியாவிலும், இரண்டு பேருக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 2) ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஜெய் ஷா அறிவிப்பு
இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ இன்று (டிசம்பர் 4) ஆலோசனை மேற்கொண்டது.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுச்செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரையும் விளையாட இந்திய அணி வேறு தேதியில் விளையாடும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ உறுதியளித்துள்ளது. மீதமுள்ள நான்கு டி20 போட்டிகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IND vs NZ: 3 வீரர்களுக்கு காயம்; 2ஆவது டெஸ்ட் மழையால் பாதிப்பு