பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு சமீபத்தில் பாபர் அஸாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் பாபர் அஸாம் உள்ளார்.
இந்தநிலையில் அவர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி அந்தப் பெண் கூறுகையில், '' பாபர் அஸாம் கிரிக்கெட்டராக இல்லாமல் இருந்தபோதே நாங்கள் காதலித்து வந்தோம். நாங்கள் ஒரே பள்ளியில் படித்ததோடு, ஒரு பகுதியில்தான் வசித்தோம். 2010ஆம் ஆண்டு அவர் என்னிடம் காதலை சொன்னார். நான் ஏற்றுக்கொண்ட பின், இருவரும் காதலித்து வந்தோம்.
வருடங்கள் கடந்தபோது, நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். இதைப்பற்றி எங்கள் குடும்பத்தில் தெரியப்படுத்தியபோது, அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து 2011ஆம் ஆண்டு நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறினோம். அவர் என்னிடம் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்வோம் என்றார். ஏராளமான வாடகை வீடுகளில் தங்கினோம். ஆனால் திருமணம் செய்வதை தொடர்ந்து தவிர்த்தார்.
2014ஆம் ஆண்டில் தான் அவர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போதிருந்து அவருடைய நடத்தையில் வித்தியாசம் காணப்பட்டது. பின்னர் நான் அவரிடம் திருமணம் செய்யக் கூறி கேட்டேன். அப்போது என்னிடம் நேரடியாக மறுத்தார்.