மெல்போர்ன்: Australia retain the Ashes: மெல்போர்ன்: பாக்ஸிங் டே' என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்து முதல் நாள் அன்றே ஆல்-அவுட்டானது.
82 ரன்கள் முன்னிலை
பின்னர், ஆஸ்திரேலியா அணி முதல் நாளில் 61 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 124 பின்தங்கிய நிலையில், நேற்றைய (டிசம்பர் 27) இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
முந்தைய நாள், நைட் வாட்ச்மேனாக களம் கண்ட நாதன் லயான் தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை விரட்டி, ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
மிரட்டிய ஆஸி.,
தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மட்டும் நீண்ட நேரம் களத்தில் இருந்து 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால், ஆஸ்திரேலியா முன்னிலை பெற தொடங்கியது. இருப்பினும், பிற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் ஆஸ்திரேலியா, 267 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 82 ரன்களுக்கு முன்னிலை பெற்றது.
இதன்பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் சாக் கிராலி, டேவிட் மலான் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து, போலாண்ட் 11ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில், ஹசீப் ஹமீத், நைட் வாட்ச்மேனாக வந்த ஜாக் லீச் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி போலாண்ட் அதிரடி காட்டினர். இதன்மூலம், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் (12 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 31 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது.