ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவிற்கு கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ரிஷப் பந்த பங்கேற்று, ஒரு சதமும் அடித்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
விக்கெட் கீப்பிங் செய்யும்போது ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் செய்வதுபோலவே ரிஷப் பந்தும் எதிரணி வீரர்களைக் கிண்டல்செய்கிறார். எனவே இந்த முறையும் ரிஷப் பந்திற்கு இந்தியா அணியின் தேர்வுக்குழு விளையாட வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில், இளம் வீரர் ரிஷப் பந்த் 73 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் பிங்க் பந்து கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.