அடிலெய்ட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து, ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 16) தொடங்கியது. பகலிரவு முறையில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வுசெய்தது.
ஒன்றரை நாள் பேட்டிங்
அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்களை எடுத்து இரண்டாம் நாளான நேற்று (டிசம்பர் 17) டிக்ளர் செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோசப் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் வழக்கம்போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், மழை குறுக்கிட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, இங்கிலாந்து அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளில் இங்கிலாந்து 256 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரூட் 5 ரன்களுடனும், மலான் 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரூட் - மலான் ஆறுதல்
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 18) தொடங்கியது. ரூட், மலான் இருவரும் பொறுப்புடன் விளையாடி வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்களை எடுத்தது. முதல் செஷனில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.
இதன்பின்னரே, ஆட்டம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறிது நேரத்திலேயே, ரூட் 62 ஆட்டமிழந்தார். கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் கிரீன் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதையடுத்து, மலான் 80, ஓலி போப் 5, ஜாஸ் பட்லர் ரன் ஏதும் இன்றியும் வெளியேற, தேனீர் இடைவேளையில் 197 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.