பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கியது.
இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 147 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஓலி போப் 35 ரன்களையும், பட்லர் 35 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா பேட்டிங் தொடங்குவதற்கு முன்னர், மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறைவடைந்தது.
ஆஸி., தொடர் ஆதிக்கம்
இரண்டாம் நாள் முழுவதும் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அன்றைய ஆட்டநேர முடிவில் (84 ஓவர்கள்) 7 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்களை எடுத்தது.
பின்னர், 196 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி நேற்று (டிசம்பர் 10) தொடங்கியது. அதிரடியாக சதமடித்த டிராவிஸ் ஹெட் தொடர்ந்து சீராக ரன்களை குவித்து 150 ரன்களை குவித்தார். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 425 ரன்களை எடுத்து, 272 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஹெட் 152
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹெட் 152, வார்னர் 94 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஓலி ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர்கள் லீச், ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து தனது இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் 13 ரன்களுக்கும், ஹசீப் ஹமீத் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின்னர், டேவிட் மலான் உடன் கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இருவரும் முதல் இன்னிங்ஸில் சொதப்பியதால், இம்முறை மிகவும் கவனமாக விளையாடினர். கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரின் ஓவர்களில் தடுப்பாட்டத்தையும், லயான், ஸ்டார்க் ஆகியோரின் ஓவர்களில் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
நங்கூரமிட்ட மலான் - ரூட் ஜோடி
பகுதிநேரமாக பந்துவீசிய கேமரூன் க்ரீன் மலான், ரூட் இருவர் மீது பந்துவீச்சு தாக்குதல் தொடுத்தார். இருப்பினும், அவர்களின் விக்கெட்டை மட்டும் கைப்பற்ற முடியவில்லை.
இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் (70 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 220 ரன்களை எடுத்திருந்தது. 58 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், மலான் 80 ரன்களுடனும், ரூட் 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 11) தொடங்கியது. நேற்று போலவே மலான், ரூட் இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது
லயான் 400*
ஆனால், இன்றைய ஆட்டத்தின் நான்கவாது ஓவரிலேயே மலான் 82 ரன்களில் லயானிடம் வீழ்ந்தார். மலானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வேதச டெஸ்ட் அரங்கில் தனது 400ஆவது விக்கெட்டை லயான் பதிவுசெய்தார். மேலும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் இதே காபா மைதானத்தில் லயான், இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை எடுத்தது, அவரின் 399ஆவது விக்கெட்டாக இருந்தது. தற்போது ஓராண்டு கழித்து தனது அடுத்த விக்கெட்டை லயான் கைப்பற்றியுள்லார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 89 ரன்களுக்கு, க்ரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஓலி போப் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
19 ரன்கள் இலக்கு
பின்னர், ஸ்டோக்ஸ் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால், ஸ்டோக்ஸ் 14 ரன்களிலும், பட்லர் 23 ரன்களிலும் வெளியேறி இங்கிலாந்தை நட்டாற்றில் விட்டனர்.
அடுத்துவந்த ஓலி ராபின்சன், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 297 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மேலும், இங்கிலாந்து அணியால், ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
ஆஸ்திரேலியா பந்துவீச்சு தரப்பில் லயான் 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
காபாவை மீட்டெடுத்தது ஆஸி.,
19 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரலிய வீரர்கள் அலெக்ஸ் கெரி, ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். டேவிட் வார்னர் காயம் காரணமாக ஓப்பனிஙில் களமிறங்கவில்லை.
இதையடுத்து, கெரி 9 ரன்களில் ஓலி ராபின்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், ஆஸ்திரேலியா 5.1 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து.
மேலும், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 152 ரன்களைக் குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வனார்.
மேலும், ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் காபா மைதானத்தில், கடந்த ஜனவரி மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த மைதானத்தில் தோல்வியையே காணாமல், 32 ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த பெருமையை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.
தற்போது, அதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை படுதோல்வி அடைய செய்து இழந்த பெருமையை மீட்டெடுத்துள்ளதாக ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிக்கலான நிலையில் அசாதாரண துணிச்சல்காரர் கேப்டன் வருண் சிங்!