தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ashes Boxing Day Test: முதல் நாளில் இங்கிலாந்து பரிதாபம்; ஆஸி., அட்டகாசம் - ஆஸ்திரேலியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் (ஆஷஸ் தொடர்) முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி 124 ரன்களில் பின்தங்கியுள்ளது. முன்னதாக, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

Ashes Boxing Day
Ashes Boxing Day

By

Published : Dec 26, 2021, 8:50 AM IST

Updated : Dec 26, 2021, 2:38 PM IST

மெல்போர்ன்: 'பாக்ஸிங் டே' என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான இன்று (டிசம்பர் 26) ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை இருக்கிறது.

சென்ற போட்டியில் கரோனா தொற்று தனிமைப்படுத்துதல் காரணமாக ஓய்விலிருந்த கேப்டன் கம்மின்ஸ் இன்றையப் போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், போட்டியின் டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

இங்கிலாந்து 4 மாற்றங்கள்

ஆஸ்திரேலியா அணியில் ஜை ரிச்சர்ட்சன், மைக்கெல் நெசர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேப்டன் கம்மின்ஸ் உடன் அறிமுக வீரர் ஸ்காட் போலாண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறம், இங்கிலாந்து அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோரி ஜோசப் பர்ன்ஸ், ஓலி போப், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு நீக்கப்பட்டு, சாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோவ், மார்க் வுட், ஜாக் லீச் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்க் - கம்மின்ஸ்

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் ஸ்பெல்லை ஸ்டார்க் - கம்மின்ஸ் கூட்டணி வீசியது. இரண்டாவது ஓவரை கம்மின்ஸ், ஓவரின் ஐந்தாவது பந்தில் ஹசீப் ஹமீத்தை டக்-அவுட்டாக்கி அசத்தினார்.

முதல் ஸ்பெல்லை வீசிய ஸ்டார்க் - கம்மின்ஸ் இணை முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து, 12 ரன்களை மட்டுமே கொடுத்தது. இதன்பின்னர், கம்மின்ஸ் உடன் போலாண்ட் இணைந்தார்.

கிராலி 12 ரன்கள் எடுத்திருந்தபோது, எட்டாவது ஓவரை வீசிய கம்மின்ஸ், அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் இங்கிலாந்து வீரர் கிராலியை வீழ்த்தினார். அதன்பின்னர், கேப்டன் ரூட் களமிறங்கி டேவிட் மலான் உடன் ஜோடி சேர்ந்தார்.

முடிந்தது முதல் செஷன்

இந்த தொடரில், இங்கிலாந்து அணியில், மலான் - ரூட் ஜோடிதான் ஓரளவுக்கு நன்றாக ஆடிவருகிறது. இதனால், இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்க இருவரும் போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த ஜோடி, சுமார் 20 ஓவர்களுக்கு நிலைத்துநின்ற நிலையில், 48 ரன்களை எடுத்தது. கம்மின்ஸ் வீசிய 27ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் மலான், வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர், மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. முதல் செஷனில், இங்கிலாந்து அணி 61 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரூட் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஸ்டார்க், லயான், கிரீன், போலாண்ட் ஆகியோர் சீராக பந்துவீசினர். இருப்பினும், கேப்டன் கம்மின்ஸ் அற்புதமான செட்-அப் பந்துவீச்சு முறையை கையாண்டு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ரூட் காலி

மதிய உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து சரிவை சந்திக்க தொடங்கியது.

அதில், பேரிடியாக கேப்டன் ரூட் 50 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சற்றுநேரம் தாக்குப்பிடித்த பென் ஸ்டாக்ஸ் 25, ஜாஸ் பட்லர் 3 ஆகியோர் ஆட்டமிழக்க தேநீர் இடைவேளைக்கு முன்னர், இங்கிலாந்து அணி (51.2 ஓவர்கள்) 6 விக்கெட்டுகளை இழந்தார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னரும், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. வரிசையாக மார்க் வுட் 6, ஜானி பேர்ஸ்டோவ் 35, ஓல்லி ராபின்சன் 22, ஜாக் லீச் 13 என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 185 ரன்களில் ஆல்-அவுட்டானது.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு தரப்பில், பாட் கம்மின்ஸ், நாதன் லயான் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், கிரீன், போலாண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வார்னர் அவுட்

இதன்பின்னர், ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் வார்னர், ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஒருபக்கம் வார்னர் அதிரடி காட்ட, ஹாரிஸ் நிதானமாக விளையாடினார்.

இன்றைய ஆட்டத்தின் கடைசிக்கு முந்தைய ஓவரில் வார்னர் 38 (42) ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நைட் வாட்ச்மேனாக லயான் களமிறங்கினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் (16 ஓவர்கள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்துள்ளது. ஹாரிஸ் 20 ரன்களுடனும், லயான் ரன் ஏதும் இன்றியும் களத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா 124 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: SA vs IND Boxing Day Test: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா

Last Updated : Dec 26, 2021, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details