பிரிஸ்பேன்:ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 8) தொடங்கியது.
இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 147 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஓலி போப் 35 ரன்களையும், பட்லர் 35 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா பேட்டிங் தொடங்குவதற்கு முன்னர், மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறைவடைந்தது.
தப்பித்த வார்னர்
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 9) தொடங்கியது. டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஓலி ராபின்சன் வீசிய ஆறாவது ஓவரில் ஹாரில் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மார்னஸ் லபுஷேன் அடுத்து களமிறங்கினார்.
இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். அப்போது, ஸ்டோக்ஸ் தனது முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் வார்னர் தனது ஸ்டம்பை பறிகொடுத்தார். ஆனால், அந்தப் பந்து நோ-பால் ஆனதால், வார்னர் தப்பித்தார். இந்த நோ-பால் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
லபுஷேன், ஸ்மித் அவுட்
இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட வார்னர், லபுஷேனுடன் இணைந்து சீராக ரன்களைக் குவித்தார். மதிய உணவு இடைவேளை முன்னர் வரை (31 ஓவர்கள்), ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 53 ரன்களுடனும், வார்னர் 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னரும் இந்த இணை சீரான ஆட்டத்தைத் தொடர்ந்து. லபுஷேன் 74 ரன்கள் எடுத்தபோது, லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அனுபவ வீரர் ஸ்மித் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 94 ரன்களில் ராபின்சனிடம் வீழ்ந்தார். அடுத்து வந்த கேம்ரூன் க்ரீன் ரன் ஏதும் இன்றி வெளியேற, ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழந்து 58 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
ஹெட்டின் மிரட்டல் சதம்
மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த டிராவிஸ் ஹெட் 51ஆவது பந்தில் அரைசதத்தையும், 85ஆவது பந்தில் சதத்தையும் பதிவுசெய்தார். மற்ற வீரர்கள் அலெக்ஸ் கேரி, கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் (84 ஓவர்கள்), ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் 343 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா 196 முன்னிலை பெற்றுள்ளது.
டிராவிஸ் ஹெட் 110 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ராபின்சன் 3 விக்கெட்டுகளையும், லீச், ரூட், வோக்ஸ், வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
நோ-பால் சர்ச்சை
இப்போட்டியில், ஸ்டோக்ஸின் நோ-பால் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் வீசிய முதல் ஓவரில் நான்காவது பந்தை மட்டுமில்லாமல், முதல் மூன்று பந்துகளையும் நோ-பாலாகத்தான் வீசியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இப்போட்டியின் காணொலியை ஆய்வுசெய்த டிவி 7 சேனல், "ஸ்டோக்ஸ் இன்று மட்டும் 14 நோ-பால்களை வீசியுள்ளார். ஆனால், இரண்டு பந்துகள் மட்டும் நோ-பால் கொடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளது.
புதிய நடைமுறையின்படி, நோ-பால்களை கள நடுவர்கள் கவனிக்க மாட்டார்கள். மூன்றாவது நடுவரே நோ-பால்களை கவனித்துக்கொள்கிறார். இந்நிலையில், ஏறத்தாழ 12 பந்துகளை மூன்றாவது நடுவர் பால் வில்சன் கவனிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு மூத்த கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுகின்றன.
மன அழுத்தம் காரணமாக நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த ஸ்டோக்ஸ், இப்போட்டியில் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் வீசிய முதல் ஓவரில் நான்கு நோ-பால்கள் போடப்பட்டது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆஷஸ் தொடர் என்றாலே சர்ச்சைக்குப் பேர்போனது என்ற நிலையில், முதல் போட்டியின் இரண்டாம் நாளே புது சர்ச்சை ஒன்று உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டிக்கும் இனி ரோஹித்தான் கேப்டன்