லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆக. 12) புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் டிரான்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டி டிராவானதால், தொடரில் முன்னிலைப் பெற இரு அணிகளும் லார்ட்ஸ் டெஸ்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
தொடரும் காயங்கள்
முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைப்பட்டிருந்தாலும், அந்தப் போட்டி இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. கடைசிநாளில் இந்திய அணிக்கு 157 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தது கவனிக்கத்தக்கது.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகிய மயாங்க் அகர்வால் தற்போது பயிற்சிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், பயிற்சியின்போது பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு தசைவலி ஏற்பட்டுள்ளது.
இதனால், நாளைய ஆட்டத்தில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படாத நிலையில், பேட்டிங்காக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். நாட்டிங்காமில் இந்த ஃபார்முலா கைக்கொடுத்தது என்றாலும், லார்ட்ஸ் டெஸ்டின் சூழல் வேறு.
2018 லார்ட்ஸ் நினைவு
இதேபோன்று 2018ஆம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆனால், அப்போட்டியில் ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்பட்டது. இந்தியா 107, 139 ரன்களுக்கு சுருண்டு மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தது. அப்போது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளம் கைக்கொடுக்கவில்லை. அதே போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடதக்கது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி
ஃபார்முலா மாறுமா?
தற்போது லண்டனில் அதிகபட்சமாக 24 டிகிரி வெப்பம்தான் பதிவாகி வருகிறது. ஆடுகளம் புற்கள் இல்லாமலும், ஈரப்பதம் இன்றியும் காணப்படும்பட்சத்தில், அஸ்வின் - ஜடேஜா கூட்டணியை களமிறக்குவதில் கோலிக்கு எந்த பிரச்னையும் இல்லை.
அஸ்வினின் தேவை தற்போது இல்லை என்று கோலி நினைத்தார் எனில், இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை சேர்ப்பது மூலம் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற தற்போதைய 4:1 ஃபார்முலாவே தொடரும்.
இந்திய பேட்டிங் வரிசையை பார்த்தால் சிக்கல் இல்லை என்றாலும், புஜாரா, ராஹானே, விராட் கோலி ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. தற்போது மயாங்க் அணியில் சேர்க்கப்பட்டால், மிடில் ஆர்டரை பலப்படுத்த கே.எல். ராகுல் ஐந்தாவது வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்துக்கு பிரச்னை
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட்டை தவிர்த்து முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் ஒரு அரைசதம், ஒரு சதம் அடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்
தொடக்க வீரர் ஜோசப் பர்ன்ஸுக்கு பதிலாக ஹசீப் ஹமீத் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முன்னணி பந்துவீச்சாளர் பிராட், பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மொயின் அலி அல்லது சராசரியாக மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீசக்கூடிய மார்க் வுட் போன்றோர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்குவாட்
இந்திய அணி:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, மயங்க் அகர்வால், அஜிங்கயா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.
இங்கிலாந்து அணி:ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோம் பெஸ், மொயின் அலி, ஜோசப் பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் க்ராலி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஓல்லி போப், ராபின்சன், டோம் சிப்லி, மார்க் வுட் .
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.
இதையும் படிங்க: இங்கிலாந்து-இந்தியா: இரண்டு புள்ளிகளை பறித்தது ஐசிசி!