தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் டி20 போட்டி நேற்று இரவு நடந்த நிலையில், பேர்ஸ்டோவின் அதிரடியால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் - பவுமா இணை தொடக்கம் கொடுத்தது. சாம் கரண் வீசிய முதல் ஓவரிலேயே பவுமா 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் டி காக் - டூ ப்ளஸிஸ் இணை சேர்ந்தது.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய டூ ப்ளஸிஸ் 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது 5ஆவது ஓவரை வீச டாம் கரண் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் டூ ப்ளஸிஸ் 6,4,6,2,2,4 என 24 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்க 5 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது. இந்த இணை 77 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் டி காக் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய டூ ப்ளஸில் 40 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி நேரத்தில் க்ளாசன் 20, லிண்டே 12 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. அதிலும் ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த டேவிட் மாலன் 20 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் பேர்ஸ்டோவ் - ஸ்டோக்ஸ் இணை இங்கிலாந்து அணியை கரை சேர்த்தது.