ஹைதராபாத்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகளை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் விதிமுறையை சோதனை அடிப்படையில் வர முடிவு செய்துள்ளது.
ஸ்டாப் கிளாக் விதிமுறை:ஸ்டாப் கிளாக் விதிமுறை என்பது பந்து வீசும் அணி, ஒரு ஓவர் முடிந்தவுடன் 60 விநாடிகளில் அடுத்த ஓவர் வீச தொடங்கிட வேண்டும். ஒரு வேளை அந்த அணி இந்த கட்டுப்பாட்டை 3 முறைக்கு மேல் மீறினால் 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.
இந்த விதிமுறைகள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வரும் டிசம்பர் 2023 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் விளையாட்டின் நேரத்தை குறைக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக ஐசிசி கூறுகிறது.
திருநங்கைகள் விளையாடத் தடை:ஆண்களாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதித்துள்ளது. அதாவது ஆண் எந்த வகையான பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டு இருந்தாலும் சர்வதேச மகளிர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த விதிமுறை மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் ஐசிசி கூறியுள்ளது.