மேக்கே: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, இந்திய மகளிர் அணி தொடரை இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (செப். 26) நடைபெற்றது.
ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்
இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 67, பெத் மூணே 52 ரன்களையும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க பேட்டர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்த நிலையில், மந்தனா 22 (25) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜூலனின் பவுண்டரியில் வெற்றி
ஷஃபாலி, யஸ்திகா பாட்டியா இரண்டாவது விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு 101 ரன்களை சேர்த்தது. அதன்பின்னர், ஷபாலி 56, ரிச்சா கோஷ் 0, மிதாலி ராஜ் 18, பூஜா வஸ்த்ரகர் 3 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, தீப்தி சர்மா, சினேகா ராணா விரைவாக ரன்சேர்க்க இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜூலன் கோஸ்வாமி பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம், இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை 266 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி 34 ரன்களை உதிரி (Extras) ரன்களாக வழங்கியிருக்கிறது.
தொடரை இழந்தாலும் கெத்துதான்
மேலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து 26 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த நிலையில், இந்திய மகளிர் அணி அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்திய மகளிர் அணி தொடரை இழந்திருந்தாலும், வலிமையான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கவனித்தக்க வெற்றியாகும். இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: என்றும் முதலிட மகாராணி மிதாலி ராஜ்!