டாக்கா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஜூலை. 22) வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஸ்ரீ வங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 49 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
முன்னதாக 34வது ஓவரின் 4வது பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற போது பந்து காற்றில் பறக்க, அதனை வங்கதேசத்தின் நஹிதா அக்தர் பிடித்து கேட்ச் முறையில் விக்கெட் கோரினார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்து விட்டார். ஆனால், பந்து தனது பேட்டில் படவில்லை என கூறிய ஹர்மன்பிரீத் கவுர் தனது பேட்டால், ஸ்டம்ப்பை அடித்தார்.
தொடர்ந்து நடுவரை நோக்கி கோபமாக எதையோ பேசிக் கொண்டே சென்றார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து இரு அணி வீராங்கனைகளுக்கும் கோப்பை வழங்கப்பட்ட நிலையில், வங்கதேச கேப்டனுடன் ஹர்மன்பிரீத் கவுருக்கு காரசார விவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த இரு சம்பவங்களை அடுத்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐசிசி தெரிவித்து உள்ளது. அதன்படி போட்டிக் கட்டணத்தில் இருந்து ஹர்மன்பிரீத் கவுருக்கு 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டியின் போது நடுவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு 50 சதவீதமும், வங்கதேச கேப்டனுடனான காரசார விவாதத்திற்கு 25 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீரர், வீராங்கனைகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு வழங்கப்படும் தகுதி புள்ளிகளில் ஹர்மன்பிரீத்கவுக்கு 4 தகுதியிழக்க புள்ளி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Korea Open Badminton : சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்!