மும்பை: ஆசியக்கோப்பை 2022 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா நேற்றிரவு (ஆக. 8) ட்விட்டரில் அறிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இத்தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் ஆக. 28ஆம் தேதி சந்திக்கிறது.
யாருக்கெல்லாம் இடமில்லை...?:டி20 ஃபார்மட்டில் நடைபெறும் இத்தொடரில், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. மேலும், காயம் காரணமாக நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த கேஎல் ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்டர்களில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோரும் டி20 அணியில் தொடர்கின்றனர்.
டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் நட்சத்திர பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் யாருக்காவது தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லாத நிலையில், இவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள்.
உலகக்கோப்பைக்கு முன்னோட்டமா?: பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் பௌலர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதால், அஸ்வின், சஹால், ஜடேஜா, பீஷ்னாய் என சுழற்பந்துவீச்சு பலப்படுத்தப்பட்டுள்ளது.