இளம் புயல் உம்ரான் மாலிக்:நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்து வீச்சால் திணறடித்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான உம்ரான் மாலிக்கிற்கு டி-20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மிக சொற்ப அளவிலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்து வீசுவது உண்டு. ஆனால், உம்ரான் மாலிக் சர்வ சாதாரணமாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்குப் பந்து வீசிகிறார்.
வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்களான அக்தர், பிரெட் லீ ஆகியோரும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர். சோயப் அக்தர் தனது அதிகப்பட்ச வேகப்பந்து வீச்சை உம்ரான் மாலிக் முறியடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருக்கிறார். அக்தர் 161 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளிலும் உம்ரான் மாலிக்கே அதிகப்பட்ச வேகப்பந்து வீச்சுக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
மேலும் 22 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். உம்ரான் மாலிக் சில திருத்தங்களை செய்து கொண்டால் போதும், நிச்சயம் அவர் தான் இந்தியாவின் எதிர்காலம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சாதித்துக்காட்டிய தினேஷ் கார்த்திக்:36 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து இருக்கிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு பினிஷர் ரோலில் விளையாடி வரும் கார்த்திக் 14 ஆட்டங்களில் 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 287 ரன்கள் குவித்து உள்ளார்.
ஏபிடி வில்லியர்ஸ் சென்ற பிறகு பெங்களூரு அணி தேடி வந்த பினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதேபோல் இந்திய அணியில் தோனி விட்டுச் சென்ற பினிஷர் ரோலை, தனது அனுபவத்தால் கார்த்திக் நிரப்புவார் என பிசிசிஐ நம்புகிறது. டி-20 உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பது சரியான முடிவு என ரசிகர்கள் நம்புகின்றனர்.
யார்க்கர் வீசி கலக்கும் அர்ஷ்தீப் சிங்: ஜாகீர் கானுக்குப் பிறகு இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளருக்கு பஞ்சம் என்றே சொல்லலாம். கலீல் அகமது, பரிந்தர் சரண், ஜெய்தேவ் உனட்கட் என பலரை முயற்சி செய்தும் யாரும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை. ஒன்று, இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு காணாமல் போய் விட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டும் காயம் காரணமாக இடத்தை இழந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
இந்த தருணத்தில் 22 வயதே ஆன அர்ஷ்தீப் சிங் தனது அபார பந்து வீச்சால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடிக்கவில்லை என்றாலும், ஸ்லோ மற்றும் யார்க்கர் வீசுவதில் கில்லாடியாகத் திகழ்கிறார். கடந்த 3 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர் ஸ்பெலிஷ்டாக மிரட்டுகிறார். அவரது எக்கானமி 8-க்கும் குறைவாகே உள்ளது.
கழற்றிவிடப்பட்ட தவான், சாம்ஸன் காரணம் என்ன?:சீனியர் வீரர்களான தவானும், சாம்ஸனும் ஏன் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடப்புத்தொடரில் பஞ்சாப் அணியில் டாப் ஸ்கோரராக தவான் உள்ளார்.
தொடர்ச்சியாக அனைத்து சீசன்களிலும் 400 ரன்களுக்கும் மேல் தவான் குவித்தும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். ராகுல் , ரோகித் , ரிதுராஜ் , இஷான் கிஷன் என ஓபனிங் ஸ்லாட்டுக்கு பலத்த போட்டி இருப்பதாலும், தவானுக்கு 35 வயதுக்கு மேல் ஆகி விட்டதாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ அவரை தேர்வு செய்யாமல் இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் தேவைப்பட்டால் கே.எல்.ராகுலும் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால் சஞ்சு சாம்ஸனுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் , தீபக் ஹூடா , ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா , வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் உள்ளதால் பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்ஸனுக்கு இடம் கிடைக்கவில்லை...
இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் - ரசிகர்கள் மகிழ்ச்சி!