பெங்களூரு: ஒருநாள் உலகக் கோப்பையை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடர் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நேற்று (டிச.03) முடிவடைந்தது. இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்த தொடரை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தினார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையை எதிர் நோக்கி இளம் வீரர்களை கொண்ட அணியை இந்திய நிர்வாகம் உருவாக்கியது. இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டனர். அந்த அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது.
அந்த வகையில், இளம் வீரரான ரவி பிஷ்னோய் தான் விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.